Thursday, August 28, 2014

நீயா நானா? - மருத்துவர் மேல் பாய்ச்சல்


நீயா நானா? - மருத்துவர் மேல் பாய்ச்சல்

தொழிலில் உள்ள எல்லா பொறியாளர்களுமே நல்ல பொறியாளர்களா எல்லாருமே நல்ல ஆசிரியர்களா? அது போலத் தான் மருத்துவத்துறையும் அங்குமிங்கும் குற்றம் குறை இருக்கத் தான் செய்கிறது. எனக்குத் தெரிந்து, ஒரு ஐடி கம்பெனியில் பணிக்குச் சேர்ந்த ஒன்றிரண்டு வருடத்தில், ஒரு பையனோ பெண்ணோ ஆன்சைட் வாய்ப்பு கிடைக்குமா என்று தான் பார்க்கிறார்கள். அது அமெரிக்காவுக்கு சேவை செய்ய எல்லாம் இல்லை, பணம் ஈட்டத் தான். மனித உபாதைகளையும் நோய்களையும் குணப்படுத்துவதால் அல்லது உயிரைக் காப்பாற்றுவதால் மருத்துவத்துறைக்கு சமூகத்தில் உயரிய இடமளிக்க வேண்டும் என்ற விவாதத்துக்குள் செல்வதில் எந்தப் பயனுமில்லை.

Medicine is also a profession like others.  மேலும் வணிக நோக்கு (அல்லது பொருள் சார்பு -materialism) மிகுந்திருக்கும் காலச்சூழலில், மருத்துவத்துறையிலும் அதன் தாக்கம் இருப்பது இயல்பானதே.  பொதுவாக ஆசிரியர்கள், மருத்துவர்கள் என்ற இரு தரப்பினரையும் சற்று உயர்வான இடத்தில் நம் சமூகம் பல காலமாக வைத்து வந்துள்ளது. அவர்களின் குறைபாடுகள் சற்று தீவிரமாக பார்க்கப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கியக்காரணம். ஒரு 30-35 ஆண்டுகளுக்கு முன் அவை இரண்டும் மேன்மை (Nobility என்ற பொருளில்) மிக்க தொழில்களாக, சேவையாக கருதப்பட்டன. இப்போது அது சீரியஸாக கேள்விக்குள்ளாகி வருகிறது, வருத்தமான விஷயம் தான். நிற்க.

மருத்துவத்துறை சார் பிரச்சினைகளை/குறைபாடுகளை ஆராய்ந்து களையவேண்டிய கடமை மருத்துவர்களுக்கும், அரசுக்கும், சமூகத்திற்கும் என்று எல்லாருக்கும் உள்ளது என்பதை உணர்தல் அவசியம்.  விஜய்டிவியில் சமீபத்தில் ஒளி”பரபரப்பான” ”நீயா நானா” நிகழ்ச்சி கொண்டு செல்லப்பட்ட விதமும், அதில் நடந்தேறிய Gimmicks-ம் டி.ஆர்.பி எகிறுவதற்கு பயனளித்திருக்குமே அன்றி, அதில் சமூக நோக்கு உள்ளது என்று ஒப்புக் கொள்வது கடினம். மருத்துவத்தொழில் மீது வைக்கப்படும் முக்கியப் புகாரான அலட்சியப்போக்கை (Negligence) கண்டறிய/எதிர்கொள்ள சுமுகமாக முறையில் வழிவகை காணப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, வேறு விஷயம்.

ஒரு கேள்வி கேட்டு விட்டு எதிர்தரப்பு பதிலை முடிக்கும் முன்னே குறுக்கீடு என்பது, அப்பட்டமான சார்பு தெறிக்கும், அர்னாப் ஸ்டைல் விவாதமேடை, அதனால் துளியும் பயன் இல்லை. மாஸ்டர் ஹெல்த் செக்  (MHC) என்பதை விளக்கக் கூட விடாமல், ”மாஸ்டர்” என்ற சொல் இருப்பதால், அது அனைத்து வகையான பரிசோதனைகளையும் உள்ளடக்கிய ஒன்று போலத் தோற்றமளிப்பதாகக் கூறுவது, உளறுதல் அல்லாமல் வேறென்ன?  நல்லவேளை, ”மாஸ்டர்” ஹெல்த் செக் என்பதை சரக்கு மாஸ்டர் அல்லது ஹெட்மாஸ்டருக்கு மட்டுமே செய்யவேண்டும் என்று மருத்துவர் மேல் பாய்ந்த சிலபல கனவான்களில் யாரும் சொல்லவில்லை ;-)

மருத்துவர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுவதின் வாயிலாக யதார்த்தத்தில் பிரச்சினைகளை முறையாக அலச முடியுமா, தீர்வை அணுகத்தான் முடியுமா ? தொடர்பில்லாமல் அவரவர் ஏதேதோ பேசுவதை விடுத்து, மருத்துவத்துறை சார்ந்த 3-4 முக்கியப்பிரச்சினைகளை கையில் எடுத்து, இரு தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்து, ஆரோக்கியமான முறையில் அவற்றின் தாக்கங்களையும், தீர்வுகளையும் முன் வைப்பதே, சமூகப்பிரச்சினைகளை  அலசி ஆராய்வதாகக் “காட்டி”க்கொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு அழகு! இதையெல்லாம் மருத்துவத்துறையை விட பல மடங்கு வணிக நோக்கமும், அப்பட்ட சார்பு நிலை பற்றி துளியும் கவலையில்லாத டிவி மீடியாவில் எதிர்பார்க்கலாமா என்று யாராவது கேள்வி கேட்டால் நான் அம்பேல்!

மேற்கூறிய நிகழ்ச்சியில் மருத்துவரை மட்டம் தட்டவேண்டும் என்ற சார்பு நிலையுடன், அதிபுத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு ஆவேசப்படுவதும், ஒரு isolated incident-ஆல் (இன்னும் சிலவும் இருக்கலாம் தான்) பாதிக்கப்பட்டவரை முன்னிறுத்தி ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பையும் காழ்ப்பையும் உண்டாக்கி குளிர்காய்வதும், ’நீயாநானா’ இன்னும் பிரபலம் அடைவதற்கும், கோபிநாத்தின்  “சமூகக்காவலர்” இமேஜை செம்மைப்படுத்தவும் நிச்சயம் உதவலாம்! ஏதோ ஒரு கோவை(?) மருத்துவமனையின் அலட்சியப்போக்கால் பாதிக்கப்பட்ட அப்பெற்றோருக்கு ”உரிய நீதி” கிடைக்க, கடைசி வரை விஜய்டிவியும், ”நீயாநானா” குழுவினரும் துணை நிற்கப் போகிறார்களா என்று யாராவது கேட்டுச் சொல்லவும்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாலும், சிலபல “நீயா நானா” நிகழ்ச்சிகளில் “அனைத்தும் யாம் அறிவோம்” என்ற தொனியை காண முடிந்தது.  மருத்துவருக்கு எதிரான நிகழ்ச்சியில் அத்தொனியும், blatant-ஆன சார்பும் சற்று தாங்கமுடியாமல் இருந்ததால், சுட்டிக்காட்டவேண்டும் என்று தோன்றியது! Master Health Check தேவையற்றது என்று குரல் கொடுத்தது போல, சினிமா தியேட்டர்களில் MRP-க்கு 5-6 மடங்கு விலையில் தின்பண்டங்கள் விற்கப்படும் அநியாயத்திற்கு எதிராகவும் “நீயா நானா” குரல் கொடுத்தால், பொதுமக்களுக்குப் புண்ணியமாப் போகும்.  மல்டிபிளக்ஸ்களில் சினிமா டிக்கெட்டுக்கும், அங்கு விற்கப்படும் ஜங்க் ஃபுட்ஸ், குளிர்பானங்களுக்கும் சாமானிய மக்கள் அடிக்கடி கொட்டிக் கொடுக்கும் பணத்திற்கு, அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை அடிப்படை உடல்நலப் பரிசோதனை செய்து கொள்வது ஒன்றும் அத்தனை மோசமான விஷயமாகத் தோன்றவில்லை.

(அந்த நிகழ்ச்சியில்) எவ்வளவு அராஜகம் பண்ணியிருந்தால், ஒரு டாக்டர் இப்படி (கீழுள்ள லிங்க்கில் சுட்டப்பட்டிருக்கும் ஆடியோ!) பொங்கியிருப்பார் என்று யோசியுங்கள்! One needs to understand that Response will always be proportionate to one's behavior in a TV Show!

Tuesday, August 12, 2014

நம்பெருமாளுடன் ஒரு நாள்

இட்லிவடை வலைத்தளத்திலும் பதிப்பிக்கப்பட்டது

 
ஸ்ரீரங்கம் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டதை யோசித்து.... ஒரு நாள் பயணமாக ஸ்ரீரங்கம் செல்லலாம் என்று எடுத்த திடீர் முடிவின் காரணமாக, குடும்ப சகிதம் வெள்ளி (8.8.2014) அன்று காலையில், எப்போதும் போல லேட்டாகச் செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் ஸ்ரீரங்கம் போய்ச் சேர்ந்தேன். ஹோட்டல் அறையின் பால்கனியிலிருந்து ரம்யமான ராஜ கோபுர தரிசனமும், முரளி காபிக்கடையின் ஃபில்டர் காபியும் புத்துணர்ச்சி அளிப்பதாய் இருந்தன.

வைணவ பாரம்பரித்தில், கோயில் என்று பொதுவாகக் கூறினால், அது ஸ்ரீரங்கத்தையே குறிப்பிடுவதாகும். அழகிய மணவாளன், அரங்கன் என்றழைக்கப்படும் அரங்கமாநகருளானுக்கு “நம்பெருமாள்” என்ற பெயர் வந்ததற்கு ஒரு சுவையான காரணக்கதையை Jsri யின் வலைத்தளத்தில் (http://mykitchenpitch.wordpress.com) கண்டேன். அதன் சுருக்கம்:

ஸ்ரீரங்கத்தில் அயலாரின் படையெடுப்புக்கு (அப்போது தில்லி சுல்தான்) பயந்து,  திருமலைக்கு
ஒளித்து எடுத்துப்போன அரங்கன் விக்ரகத்தை 60 வருடங்கள் கழித்தே மீட்டு எடுத்து வந்தார்கள். அதுவரை வேறு ஒரு உத்சவமூர்த்தியை பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடந்துவந்தன. காணமல் போன அரங்கன் சிலை பற்றி அறிந்தவர்கள் யாருமே உயிருடன் அப்போது இல்லாமல் போனதால், திரும்பி வந்த விக்ரகஹத்தை அசல் என்று பலரும் ஏற்க மறுத்தனர். ஆனால், எப்போதோ காணாமல் போன ரங்கநாயகித் தாயாரின் விக்ரஹம், 60 வருடங்கள் கழித்து திருமலையிலிருந்து அரங்கன் விக்ரகம் திரும்பி வந்த அதே சமயத்தில், கிடைத்து விட, ஸ்ரீரங்கம் திரும்பிய உத்சவர் தான் அசல் அரங்கனோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டு விடுகிறது!

அரங்கன் விக்ரஹம் திருமலை செல்வதற்கு முன், அரங்கனின் ஆடைகளை சலவை செய்து வந்த, பின்னர் கண்பார்வை இழந்த 93 வயது வண்ணான் ஒருவர் இன்னும் உயிருடன் இருப்பது தெரியவருகிறது. அவரை அழைத்து விசாரித்ததில், அவர் கூறிய விக்ரஹ அடையாளங்கள் ஒத்துப் போனது. மேலும் அவர் தன்னால் அபிஷேக (திருமஞ்சன) தீர்த்தத்தை ருசித்து இனம் காணமுடியும் என்று சொல்ல, பழைய/புதிய உத்சவமூர்த்திகளின் அபிஷேக தீர்த்தமும் (ஈரவாடை என்று கூறுவர்) அவருக்கு அளிக்கப்படுகிறது. திருமலையிலிருந்து மீண்டு வந்த அரங்கனின் தீர்த்தத்தை அருந்திய அச்சலவைத்தொழிலாளி, ‘ இவரே நம் பெருமாள், இவரே நம் பெருமாள்! ’ என மகிழ்ச்சியில் கூவ, ‘நம்பெருமாள்’ என்ற பெயர் அரங்கனுக்கு நிலைத்தது. ஈரத்தமிழில் திருவாய்மொழி அருளிய காரிமாறப்பிரானை வாஞ்சையோடு “நம் ஆழ்வார்” என்று நாம் அழைப்பதில்லையா!

ஸ்ரீரங்கம் கோயில் 7 பிரகாரங்கள் கொண்ட பிரம்மாண்டமான கோயில். 108 வைணவ திருப்பதிகளில் முதன்மையானது. 10 ஆழ்வார்களால் (except மதுரகவி & தொண்டரடிப்பொடியாழ்வார்) பாடல் பெற்றது திருவேங்கடம் எனப்படும் திருமலையும், திருப்பாற்கடலும். ஆனால், 11 ஆழ்வார்களால் (except மதுரகவியாழ்வார் – இவர் தன் ஆச்சார்யன் நம்மாழ்வார் பற்றி மட்டுமே பாடியுள்ளார் -கண்ணிநுண் சிறுத்தாம்பு) பாடல் பெற்ற ஒரே திவ்யதேசம் திருவரங்கம் மட்டுமே! 247 பிரபந்தப் பாசுரங்களில் ஸ்ரீரங்கம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்குத் துணையாங் கோயில்
சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்தும் தீர்க்கும்கோயில்
திருவரங்க மெனத் திகழுங்கோயில் தானே!

என்று தன்னுடைய அதிகார ஸங்க்ரஹம் என்ற நூலில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி (பாகவத சிம்மம் என்று போற்றப்பட்ட) சுவாமி வேதாந்த தேசிகன் குறிப்பிடுகிறார்.

நம்மாழ்வார் திருவாய்மொழியில் அருளிய ”கங்குலும் பகலும் கண் துயிலறியாள்” பதிகமும், திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிப்பிரான் (10) பாசுரங்களும், தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலைப்பாசுரங்களும் எனக்குப் பிடித்தவை. தொண்டரடிப்பொடியின் இப்பாசுரம் கல்லையும் கரைக்க வல்லது!

ஊரிலே காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே (என்) கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா, அரங்கமாநகருளானே!

பெரியாழ்வாரின் பாசுர முத்து ஒன்று:

கன்னி நன் மாமதிள் சூழ்தரு* பூம்பொழில் காவிரித் தென்னரங்கம்*
மன்னியசீர் மதுசூதனா! கேசவா!* பாவியேன்வாழ்வுகந்து*
உன்னை இளங்கன்று மேய்க்கச்* சிறுகாலேயூட்டி ஒருப்படுத்தேன்*
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை* என் குட்டனே முத்தம் தா.

நாச்சியார் திருமொழியிலிருந்து:: 


தாம் உகக்கும் தம் கையிற் சங்கமே போலாவோ
யாம் உகக்கும் எம் கையில் சங்கமும்? ஏந்திழையீர்
தீ முகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே அரங்கன் தன் முகத்தை ஏறிட்டும் பார்க்காமல் சேஷசயனத்தில் இருப்பதைக் கண்டு நாச்சியார் ’புலம்புவதாக’ கீழுள்ள ஆண்டாள் பாசுரம் அமைந்துள்ளது :-) இங்கு சங்கம் என்பதற்கு அரங்கனின் கைச்சங்கு என்றும், கைவளையல் என்றும் இரு பொருள்கள் உண்டு. “அம்மனே” வுக்கு ”அந்தோ” என்று பொருள் கொள்ளவேண்டும்

அடுத்து சேரமன்னனாக விளங்கிய குலசேகர ஆழ்வாரின், பேரன்பும், பெரும்பக்தியும் இப்பாசுரங்களில் எவ்வளவு அழகாக வெளிப்படுகிறது, பாருங்கள்:

ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மாமலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திடத்
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப்பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே

கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்
கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள்
கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக்
கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப
சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த
திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி
வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே

கோயில் உள்/வெளிப் பிரகாரங்களில் பல சன்னதிகள் உள்ளன. செங்கமலவல்லித்தாயார், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமன், நுணுக்கமாக செதுக்கப்பட்ட. பிரம்மாண்டமான கருடாழ்வார், வாசுதேவன், மீசை வைத்த பார்த்தசாரதி, சுவாமி தேசிகர், தன்வந்திரி, ரங்கநாயகித் தாயாருக்குத் தனியாக என்று இப்படிப் பல. கோயில் விமானத்தில் மிக அழகான பரவாசுதேவர் கோலத்தை படத்தில் காணலாம்.இங்குள்ள ராமானுஜரின் தனிச்சன்னதியில் அவரது “தான் ஆன” திருமேனியை தரிசிக்கலாம். அமர்ந்த நிலையில் உள்ள ராமானுஜரின் சிலைக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) கிடையாது. ஆண்டுக்கு 2 தடவை (ஐப்பசி,சித்திரை), பச்சைக்கற்பூரமும், குங்குமப்பூவும் கலந்து திருமேனியில் சாற்றுவது வழக்கம். அவரது ”தமர் உகந்த” திருமேனியை மேல்கோட்டை என்ற திருநாராயணபுரத்திலும் ”தானுகந்த” திருமேனியை ஸ்ரீபெரும்புதூரிலும் தரிசிக்கலாம். பெருமாளின் துயிலணையாக விளங்கும் ஆதிசேஷனின் அவதாரங்களாக லட்சுமணன், பலராமன், ராமானுஜர் ஆகியோரைக் குறிப்பிடுவர்.மேலும் தகவல்களுக்கு:

எந்தை இராமானுச முனியை (எம்பெருமானார், யதிராசர், பாஷ்யகாரர், உடையவர், இளையாழ்வார் என்ற பிற திருநாமங்களும் இவர்க்கு உண்டு) வைணவம் தழைக்க வந்த ஒரு புரட்சித்துறவி என்று தாராளமாக அழைக்கலாம். 1000 ஆண்டுகளுக்கு முன்னமே, சாதி பேதம் பாராமல், வைணவக் கொள்கைகளை கைக்கொண்ட அனைவரும், திராவிட வேதம் எனும் பிரபந்தப் பாசுரங்களை ஓதவும், வைணவ மதச்சின்னங்களை அணியவும், சமாஸ்ரயணம் என்ற சடங்கு வாயிலாக சங்கு சக்கர முத்திரைகளை பதிந்து வைணவத்தைப் பற்றவும், இராமானுசர் வழி ஏற்படுத்தினார். பெருமாள் (திருமால்) மேல் அன்பும், பற்றும், பக்தியும் கொண்டு, அவன் தாள் பற்றி பூரண சரணாகதி மேற்கொள்ளும் அடியவர் அனைவரும் வைணவரே என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டவர் அண்ணல் இராமானுசர்.


”ரங்கா ரங்கா” கோபுரத்தின் இடது புறம் ஒரு 300 மீ தொலைவில், தெற்கு உத்தரவீதியில் மளவாள மாமுனிகளுக்கு தனிச்சன்னதி ஒன்று அமைந்துள்ளது. திருவாய்மொழிப்பிள்ளையின் சீடரான இவ்வைணவ ஆச்சார்யரன் உபதேச ரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி பிரபந்தம் ஆகிய கிரந்தங்களை அருளியதுடன் ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.

கூட்டம் குறைவாக இருப்பின், திருவரங்கம் கோயிலை முழுமையாக சுற்றிப்பார்க்க, தரிசிக்க குறைந்தபட்சம் 6 மணி நேரம் ஆகும். நான் சொன்னதற்கு மேல், திருவரங்கம் குறித்த செய்திகள் ஏராளமாக இணையத்தில் கிடைக்கின்றன. ஸ்ரீரங்கத்திற்கு அருகில் இருக்கும் இன்னும் சில கோவில்களுக்கு (கோயிலடி, திருஅன்பில், உத்தமர் கோயில், திருவெள்ளறை, குணசீலம்) சென்று வந்தது பற்றி பிறிதொரு சமயம் எழுதுகிறேன்.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails